Saturday, 19 April 2014

இந்திய தேர்தல்

             இருந்தும் இன்னொருவனிடம் கை எந்துபவன் மிகப் பெரிய பிச்சைக்காரன்.ஏனோ, இந்த வாக்கியம் இன்று ஓட்டுக்கு காசு வாங்கும் வாக்காளரை ஞாபகபடுத்துகிறது.ஓட்டுக்கு காசு கேட்டு கை எந்துபவர்களும் எனது பார்வையில் மிகப் பெரிய பிச்சைக்காரர்கள்.

இவர்களை விட மிகப் பெரிய பிச்சைக்காரர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் ஓட்டுக்கு  காசு கொடுபவர்கள். ஓட்டுக்கு  காசு வாங்குபவர்கள் கண் தெரியாத பிச்சைக்காரர்கள். ஓட்டுக்கு  காசு கொடுப்பவனோ, கண் தெரியாத பிச்சைக்காரன் தட்டில் இரண்டு ரூபாயை போட்டு, அதே தட்டில் நாலு ரூபாயை  எடுக்கும் மிகப் பெரிய பிச்சைக்காரர்கள்.

ஓட்டுக்கு காசு வாங்கி வசதியாக வாழ்ந்த ஒரு வாக்காளரை எனக்கு காட்டுங்கள். ஆனால் காசு கொடுத்த வேட்பளார்களில் ஒருவன் வசதியாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். உன் உரிமையை ஒரு பணத்திற்கு விற்றுவிட்டு, இன்று ஊழல் வளர்ந்து விட்டது என புலம்புவதில் என்ன அர்த்தம்.

இந்த இந்திய தேசத்தில் பாதி பேர் குருடர்கள் தான் அதனால் தான் வேட்பாளரின் வாக்கை மட்டும் நம்பி தன் வாக்கை வீணாக்கி விடுகின்றனர்.

என்றோ வாழ்ந்த ஏதோ ஒரு நல்ல தலைவர்களுக்காக  இன்றும் அதே கட்சிக்கு தன் கடமை ஓட்டை கணிக்கையாக்குகிறது ஒரு ஜனநாயக கூட்டம்.

ஒவ்வொரு தொகுதியிலும் நிற்கும் வேட்பாளர்கள் என்னவோ வெவ்வேறு நபர்கள் தான். ஆனால் கட்சித் தலைவரையே அனைத்து தொகுதியிலும் வேட்பாளராக பாவித்து கருப்பு மை தடவிக்கொள்கிறது ஒரு ஜனநாயக கூட்டம்.

சாதிக்காக ஆள்க்காட்டி விரலை அடமானம் வைக்கும் ஒரு ஜனநாயக கூட்டம்.

சினிமா நட்சத்திரங்களின் நகைச்சுவை பேச்சுக்கு தான் வாக்கை சிதறவிடும் ஒரு ஜனநாயக கூட்டம்.

இந்திய தேர்தலில் வேட்பாளருக்கும் கொள்கைகள் கிடையாது வாக்காளருக்கும் கொள்கைகள் கிடையாது.

தேர்தலை நினைக்கும் போது வைரமுத்துவின் வரிகள் சில நினைவுகளில் வடிகிறது.

"தேர்தல்

 ஆடுகளுக்கு
 வெட்டரிவாள் எடுக்கும் விழா

 இந்த ஆடுகளுக்கு
 ஏக சந்தோஷம்

 உரிமை வந்துவிட்டதாம்

 தங்கள் கசாப்புக்
 கடைகளைத்
 தாங்களே
 தேர்ந்துகொள்ள"

இந்த கசாப்புக் கடைகளை காவல் நிலையமாக மாற்றும் தேர்தல் எது?

-  செல்வம் வாசு

Monday, 6 January 2014

எனது முதல் கிறுக்கல்(கதை)



கடவுளின் கண்ணீர்
          கதை ஒரு கற்பனை கனவாக இருக்கலாம். ஆனால் தானும் அதை எழுத வேண்டும் என்பது பலருக்கும் கனவு. கை விரல்களுக்கு இடையில் கதை எழுத நினைத்தவர்கள் கணக்கில் நானும் உண்டு. ஆனால் என் எழுதுகோலுக்கு எரிபொருளாக அமைந்தது ஒரு கடவுளின் கண்ணீர். இந்த காணப்பட்ட நிஜம் வெறும் கதையாக மட்டும் இருந்து விட கூடாது.

செல்லும் இடமெல்லாம் செக்கு மாடு போல் நில்லாமல் இயங்கி கொண்டிருக்கும் சென்னை மாநகரத்தில் அன்றைய விடியலில் வித்தியாசம் இல்லை. என்றும் காலை 9 மணிக்கு 10-ம் நிறைமாத கர்ப்பிணியாக ஓயாத சாலை நெரிசலில் ஓரமாக சென்றுக் கொண்டிருக்கும் அரசு பேருந்துகள். ஒரு பேருந்து மட்டும் கூட்டம் அதிகமாக இல்லாமல் அமைதியாக அந்த நிறுத்தத்தில் வந்து நின்றது. அந்த ஓலக்குரலை கேட்க விரும்பாத ஈரமுள்ள மக்கள் ஏறவில்லையோ என்னவோ?

கூட்டமில்லாத காரணத்தால் ஒரு வித குதூகலத்தோடு நானும் அந்த பேருந்தில் ஏறி பயணச் சீட்டு வாங்க பின் சீட்டிலிருந்து ஒரு ஓலக்குரல் என் ஒரு பக்கத்துக்கு காதில் ஒலித்தது. ஓசை வந்த திசையில் நானும் திரும்ப, பேருந்தின் பின் சீட்டில் முதுமை எய்திய ஒரு முதுமகள். அவளது அழுகுரல் ஓயாது ஒலிக்க, அவளது அருகில் உள்ள ஒரு பெண் அவளை அமைதியாக இருக்க சொல்லி அதட்டுகிறாள். சோகத்தை சொல்ல முடியாத அந்த முதுமகள் ஒப்பாரியை மட்டும் பதிலாக வைக்கிறாள். அந்த ஒப்பாரியில் தன் மக்களை வளர்த்த அருமை பெருமைகளை அட்டவணை படுத்துகிறாள். தான் பட்ட கஷ்டத்தை எண்ணி கதறி அழ கூட அனுமதி இல்லாமல் மனதுக்குள் புலம்புகிறாள்.

"அந்த மகன் வீட்டில் கொண்டு விட்றேன். அது வசதியான வீடு. அங்க போய் இருந்துக்கோ, அதுவரை அமைதியாக இரு" என்று கடிந்து கொள்கிறாள் அருகிலுள்ள அந்த பெண்மணி. அந்த வீட்டை நினைக்க, இன்னும் அழுகை பீறிட்டு கொண்டு வர அந்த தாயின் அழுகுரல் அலைகடலைப் போல அமைதி இல்லாமல் ஒலித்துக்கொண்டே வருகிறது.

நான் இறங்கும் இடம் வந்து விட என் இதயம் மட்டும் அந்த பேருந்திலே பெரிய பாரத்துடன் நிற்கிறது. அந்த ஒதுக்கபட்டவளின் ஓலக்குரல் ஒரு புறத்து காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது.

முதியோர்களால் முற்றுகை இடப்பட்ட முதியோர் இல்லத்தை விட கொடுமையானது, மாத மாதம் ஒவ்வொரு பிள்ளைகளின் வீட்டை நோக்கி பெற்றவர்கள் எடுக்கும் இந்த படையெடுப்பு.

கட்டிய மனைவிக்கும், கட்டப்பட்ட நாய்க்கும் வீட்டில் இடம் இருக்கும் பொது கருவில் உருவாக்கிய கடவுளுக்கு காணி நிலமில்லை.

ஒரு தாய்க்கு ஐந்து குழந்தைகள் வளரும்பொது பாரமாக தெரியாத பொது, ஐந்து குழந்தைகளுக்கு மட்டும் ஏன் ஒரு தாய் பாரமாக தெரிகிறாள்?

அஞ்சு குழந்தைகளைப் பெற்றவள் அனாதையாக அழுகிறாள் அரசு பேருந்தில்.

-செல்வம் வாசு